இந்திய அரசியலமைப்பு தினம்:”ஜனநாயகத்தை காக்க உறுதிமொழி”-முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை:இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உள்ள மத்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் அரசியல் சாசன தினம் தொடங்கப்பட்டது.
அதன்படி,ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26, “இந்திய அரசியல் சாசன தினம்(அல்லது) இந்திய அரசியலமைப்பு நாள்” கொண்டாடப்படுகிறது.அந்த வகையில்,நவம்பர் 26 ஆம் தேதியான இன்று “நாட்டின் அரசியலமைப்பு நாள்” கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில்,இந்திய அரசியலமைப்பு நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“இறையாண்மை,சமத்துவம்,மதச்சார்பின்மை,ஜனநாயகம் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ள இந்தியக் குடியரசின் அரசியலமைப்பு சட்டத்தில் சமூக நீதி,கருத்து சுதந்திரம்,சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் பக்கத்திற்கு பக்கம் மிளிர்கிறது,ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொள்ளவேண்டிய நாளே இந்த அரசியலமைப்பு நாள்”,என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.