காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிரான கர்நாடக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்குள் செயல்படுத்தப்படும் காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கர்நாடக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு:
காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்கு முற்றிலும் எதிரான வகையிலும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கினை முற்றிலும் புறக்கணிக்கும் வகையிலும், மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்ததற்கு தமிழ்நாட்டின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காவேரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டிற்குள் நிறைவேற்றப்பட உள்ள நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. கர்நாடக அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
நீண்ட நாள் கனவுத் திட்டம்:
வெள்ளப் பெருக்கின்போது காவேரி, கொள்ளிடம் ஆறுகளில் இருந்து கடலில் கலக்கும் உபரி நீரை திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் கரூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர்த் தேவைக்கும், இலட்சக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதற்கும் திருப்பிவிட ஏதுவாக நீண்ட நாள் கனவுத் திட்டமான காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் தீட்டப்பட்டு, 14,400 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளுக்கான
அடிக்கல் நாட்டு விழா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் 14-02-2021 அன்று நடைபெற்றது.
பாலைவனம் – நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு தடை:
இந்தச் சூழ்நிலையில்,மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா பகுதி பாலைவனமாகிவிடும் என்பதால் அந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு ஒப்புதல் தரவில்லை என்பதற்காக, வேண்டுமென்றே தங்களுக்கு தொடர்பில்லாத, தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படவிருக்கும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு தடை கேட்டு கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது நியாயமற்ற செயல்.
சென்னை – மைசூர் இடையேயான ஒப்பந்தம்:
சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சென்னை மாகாண அரசின் அனுமதியின்றி மைசூர் மாகாண அரசு காவேரி நீரைத் தடுக்கும் வகையில் அணைகளைக் கட்டக்கூடாது என்பதுதான்.
இதற்குக் காரணம், காவேரி ஆற்றின் மேல்படுகையில் அமைந்துள்ள கர்நாடக மாநிலம் அணைகளைக் கட்டினால், காவேரி ஆற்றின் கீழ்ப் படுகையில் அமைந்துள்ள தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் தடைபடும் என்பதால்தான் தமிழ்நாட்டின் அனுமதி பெறாமல் அணைகளை கட்டக்கூடாது என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையும், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினையும் மீறி மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கும்போது அதனை தமிழ்நாடு எதிர்க்கிறது. இதற்குக் காரணம், புதிய அணைகளைக் கட்டும்போது, தமிழ்நாட்டிற்கு வருகின்ற நீரின் அளவு வெகுவாக குறையும்.
பொறாமையின் வெளிப்பாடு:
அதே சமயத்தில், காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம்; மேட்டூர் – சரபங்கா நீரேற்று திட்டம்; கடலூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கதவணைகள் கட்டும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதன் காரணமாக, தமிழ்நாட்டில் வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீர் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு திருப்பி விடப்படுமே தவிர, கர்நாடகாவிற்கு எந்தவித பாதகமும் ஏற்படாது. எனவே, தமிழ்நாட்டிற்குள் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது பொறாமையின் வெளிப்பாடு.
இதன்மூலம், “உபரி நீர் கடலில் கலந்தாலும் பரவாயில்லை, தமிழ்நாட்டு மக்களுக்கு பயன்படக்கூடாது” என்ற கர்நாடக அரசின் கெடுமதி எண்ணம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்:
சென்னை மைசூர் மாகாணங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை மீறி, வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களுக்கு திருப்பி எடுத்துச் செல்லும் திட்டம் உட்பட தமிழ்நாட்டின் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்ய கர்நாடக அரசுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. இந்த மனு முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
தமிழ்நாடு முதலமைச்சர் கவனம் :
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம், மேட்டூர் – சரபங்கா நீரேற்று திட்டம், கடலூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கதவணைகள் கட்டும் திட்டம் ஆகியவற்றிற்கு தடை கோரி கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உடனடியாக தள்ளுபடி செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…