எல்லாவற்றையும் அரசு செய்துவிட முடியாது.! மக்களும் பங்கேற்க வேண்டும்.! – முதல்வர் கோரிக்கை.!
எல்லாவற்றையும் அரசு செய்துவிட முடியாது. அரசு திட்டத்தில் மக்கள் பங்கேற்க வேண்டும். அதற்கான திட்டம் தான் நம்ம ஸ்கூல் திட்டம். – முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இன்று தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கான பிரத்யேக இணையதளத்தையும் விழாவில் முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசுகையில், ‘ அரசு பள்ளிகளை தனியார் பங்களிப்போடு மேம்படுத்தும் திட்டம் தான் நம்ம ஸ்கூல் திட்டம். அனைவரது மனதிலும் மறக்க முடியாத பருவம் என்றால் பள்ளிப்பருவம். வாழ்வில் உயர்வை பெற நமக்கு அடித்தளம் அமைத்தது பள்ளிப்பருவம் தான். எல்லாவற்றையும் அரசு செய்துவிட முடியாது. அரசு திட்டத்தில் மக்கள் பங்கேற்க வேண்டும். அதற்கான திட்டம் தான் நம்ம ஸ்கூல் திட்டம். என முதல்வர் கூறினார்.
மேலும், திமுக அரசு அனைத்து துறைகளிலும் ஒருமித்த முன்னேற்றத்தை நோக்கி செல்கிறது. அண்மையில் ஓர் தனியார் பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் இந்திய அளவில் சிறந்த மாநிலமாக நம்பர் 1 இடத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது என குறிப்பிட்டார்.
இந்திய அளவில் தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் 2ஆம் இடம். முதலிடத்திற்கு செல்ல நாம் முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம். எண்ணும் எழுத்து திட்டம், மாதிரி பள்ளிகள் திட்டம், நான் முதல்வன் திட்டம், நம்ம ஸ்கூல் ஸ்கூல் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அரசு பள்ளி என்பது மக்கள் சொத்து. 37,000 பள்ளி குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. அதில், பெற்றோர்கள், மக்கள் பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள் இணைந்து பள்ளி குழுக்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. நம்ம ஸ்கூல் திட்டத்திற்கான நிதி பயனுள்ள முறையில் செலவிடப்படும் எனவும் முதல்வர் விழா மேடையில் உறுதியளித்தார்.