தமிழர்கள் மீது இத்தனை காழ்ப்பும்,வெறுப்பும் ஏன்.? பிரதமர் மோடி பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

pm modi mk stalin

சென்னை : வாக்குகளுக்காக தமிழர்களை இழிவுபடுத்த வேண்டாம் பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.

ஒடிசா மாநிலத்தில் (மே20) நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டபோது பிரதமர் மோடி புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போனது பற்றி பேசியது பேசுபொருள் ஆகி உள்ளது. அதில் பேசிய பிரதமர் மோடி” நம்மளுடைய வீட்டு சாவி காணாமல் போய்விட்டது என்றால் நாம் ஜெகந்நாதரிடம் முறையிடலாம்.

ஆனால், 6 ஆண்டுகளாக ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவி காணாமல் போய்விட்டது. மக்கள் இந்த சாவி தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்” என பேசி இருந்தார்.  இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குகளுக்காக தமிழர்களை இழிவுபடுத்த வேண்டாம் பிரதமர் மோடிக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது ” ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசி இருக்கிறார். இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் புரி ஜெகந்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும்.

ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது? ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா? தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா? தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?

தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழ்நாட்டு மக்களைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்! வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்