யானை பசிக்கு சோளப்பொரி போல தான் தமிழக பட்ஜெட் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
யானை பசிக்கு சோளப்பொரி போல தான் தமிழக பட்ஜெட் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், யானை பசிக்கு சோளப்பொரி போல தான் தமிழக பட்ஜெட் உள்ளது என்று விமர்சித்துள்ளார்.
மேலும், மக்களுக்கு டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் டிமிக்கி தான் தமிழ்நாடு பட்ஜெட். பெட்ரோல் மீதான வரியை பெயருக்கு ரூ.3 குறைத்துவிட்டு வானத்திற்கும், பூமிக்கும் குதிப்பார்கள். தேர்வுக்கு விலக்கு பெறுவதாக கூறி மாணவர்களை திமுக அரசு குழப்பிவிட்டது. பரிசீலிக்கிறோம், குழு அமைக்கப்படும், ஆராயப்படும் என்றுதான் கூறுகிறார்கள்; தெளிவான நிலை இல்லை. அடுத்ததாக சொத்துவரி, பேருந்து, மின்கட்டண உயர்வு என எல்லாவற்றையும் கொண்டு வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.