ஜூன் 15ல் முதலமைச்சரை சந்தித்து வெள்ளை அறிக்கை அளிக்க தமிழக பாஜக முடிவு!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் நியமிக்கப்பட்ட குழு ஜூன் 15- முதலமைச்சரை சந்தித்து அறிக்கை அளிக்க முடிவு.
ஜூன் 15ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வெள்ளை அறிக்கை அளிக்க தமிழக பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையால் நியமிக்கப்பட்ட குழு ஜூன் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வெள்ளை அறிக்கை அளிக்க உள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் நியமிக்கப்பட்ட குழுவில் கரு நாகராஜன், வி பி துரைசாமி, பொன்.பாலகணபதி, கார்த்திகாயணி, உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர். தமிழ்நாட்டில் கள்ள சாராயத்தை தடுப்பது குறித்தும், பனை , தென்னை, கள் உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும் இந்த குழு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அறிக்கை அளிக்க உள்ளனர்.
மேலும், டாஸ்மாக் மதுபானங்களில் முறைகேடு மற்றும் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, செஞ்சி மஸ்தானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் அந்த அறிக்கையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கடந்த மே 21ம் தேதி தமிழ்நாடு ஆளுநரை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து கள்ள சாராய உயிரிழப்புகள் குறித்தும், அமைச்சர்கள் முறைகேடு குறித்தும் புகார் மனு அளித்திருந்தார்.