தொடர்ந்து 5வது முறையாக தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம்.. பிரதமர் மோடி விருதை வழங்கினார்..
- தமிழகத்திற்க்கு மத்திய அரசின் புதிய விருது.
- பிரதமரிடம் இருந்து அமைச்சர் ஜெயக்குமார் விருதை பெற்றார்.
தமிழகத்தில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியை அதிகரிக்க, தமிழ்நாடு அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சாதனை படைக்கும் மாநிலங்களுக்கு, மத்திய அரசின் சார்பில் ‘க்ரிஷி கர்மாண்’ என்ற விருது வழங்கி வருகிறது.அந்த வகையில், இதற்க்கு முந்தைய சாகுபடியில், எண்ணெய் வித்துகள் சாகுபடியில் சிறந்த சாதனை படைத்ததற்காக, தமிழகத்திற்கு, க்ரிஷி கர்மாண் விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை கர்நாடக மாநிலம், தும்கூரில் இன்று நடந்த விழாவில், பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழக அரசிற்கு இந்த விருதை வழங்கினார். இந்த விருதை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பிரதமர் மோடியிடமிருந்து பெற்றுக் கொண்டார். இந்த விருதை வாங்க அமைச்சர் ஜெயக்குமாருடன் வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி மற்றும் இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆகியோரும் கர்நாடகா சென்றுள்ளனர். மேலும், தமிழ்நாடு இந்த விருதை 5வது முறையாக வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் பயனாக மத்திய அரசும் பல்வேறு திட்டங்களின் கீழ், நிதி உதவியும் வழங்கி வருகிறது. இந்த நிதியில், விவசாயிகளுக்கு மானிய உதவிகள் வழங்கப்படுவதால், பயிர் சாகுபடி, ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.