பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!
மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்ட மதுரை டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக சட்டசபை இன்று (டிச.9) கூடுகிறது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இதில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், அண்மையில் உயிரிழந்த தலைவர்கள், ஆளுமைகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
2024-25 ஆம் ஆண்டுக்கான துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதாவது, அரசுக்கு இந்த நிதியாண்டில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவுகள் குறித்து சபையில் விவாதிக்கப்பட்டு, துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. குறிப்பாக, மதுரை டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
2 நாள்கள் மட்டுமே நடத்தப்படும் இக்கூட்டம், இந்த ஆண்டுக்கான கடைசிக் கூட்டமாக இருக்கும். நாளை (டிச.,10) கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும். தமிழக சட்டமன்றத்தில், துறை வாரியாக மானியக் கோரிக்கைகளுக்காக கடைசியாக ஜூன் 20 முதல் 29 வரை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
அந்த வகையில், பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.