பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று கூடுகிறது தமிழக சட்டமன்றம்…
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது.அவர் உரையை வாசித்து முடித்ததும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரை 4 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. இந்த கூட்டத்தில், முதலாவதாக கூட்டம் தொடங்கியதும், மரபு படி சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். இதைத்தொடர்ந்து தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையின் மீது பொது விவாதம் தொடங்கும். இந்த நிதிநிலை அறிக்கையில்,
- பள்ளி கல்வித்துறைக்கு ரூ31,181 கோடி,
- ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ6,754
- போடி நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ18,540 கோடி நிதி
என பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் புதிய கவர்ச்சிகரமான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றும், அதற்கு முக்கிய காரணம் தமிழக அரசு கடன் தொகை அதிகரிப்பு தான் என்றும் எதிர்கட்சிகளால் குற்றம் சாற்றப்படுகிறது. மேலும், இன்றைய கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் அது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், தஞ்சை மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்பட பல விவகாரங்களை எதிர்கட்சிகள் கையில் எடுப்பார்கள் என்று தெரிகிறது.