இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல்! விவசாயிகள் கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுமா?
வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் காலை 9.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார். அடுத்த 2 ஆண்டுகளில், 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கை கணினி அல்லது மடிக்கணினி வழங்க ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைப்போல, பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என முக்கிய அறிவிப்புகள் வெளியானது.
அதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் இன்று (சனிக்கிழமை) 2025-26 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் காலை 9.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர், வேளாண்மைக்கு தனியாக தாக்கல் செய்யப்படும் 5வது பட்ஜெட் ஆகும்
இந்த பட்ஜெட்டில், வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுமா? என்கிற கேள்வியுடன் தான் விவசாயிகள் காத்திருக்கிறார்கள். கடந்த 2024-25ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளின் நலனை முன்னிலைப்படுத்தி பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால்,…
நுண்ணீர்ப் பாசனத் திட்டம்: விவசாய நிலங்களில் தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகளை அமைக்க மானியங்கள் வழங்கப்பட்டன. இது உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.
மண்ணுயிர் காப்போம் திட்டம்: மண்ணின் உயிர்ச்சத்து மற்றும் பயிர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக மொத்தம் ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள்: 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
எனவே, கடந்த ஆண்டை போலவே இன்று தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள், புதிய திட்டங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.