33% Reservation : மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா.! தமிழ் மாநில காங்கிரஸ் வரவேற்பு.!

TM Congress Leader GK Vasan

கடந்த செவ்வாய்க்கிழமை 19ஆம் தேயன்று புதிய நாடாளுமன்றத்தில்  நடந்த சிறப்பு கூட்டத்தொடரின் முதல் அலுவல் பணியாக, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் வரை இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.

மகளிருக்கு அளிக்கும் 33% இட ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு பட்டியலின பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும். 15 ஆண்டுகளுக்கு இந்த மசோதா அமலில் இருக்கும். அதன் பிறகு வேண்டும் என்றால் நீட்டித்து கொள்ளலாம் என அறிவித்தார். இந்த மசோதாவுக்கு “நாரி சக்தி வந்தன்” என பெயரிடப்பட்டது.

இந்த சட்ட மசோதாவானது, மக்களவையில் பெருவாரியான வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. மொத்தமுள்ள 545 உறுப்பினர்களில் 454 உறுப்பினர்கள் இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன்மூலம் மக்களவையில் இந்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு தமிழ்மாநில காங்கிரஸ் வரவேற்பை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பாராளுமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பாக மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு நிலைகளில் மகளிர்க்கான இட ஒதுக்கீட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறாத நிலையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது வரவேற்க தக்கது.

அரசியலிலும், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பெண்களுக்கு பிரதிநித்துவம் வழங்க வேண்டும். பெண்களுக்கான பிரதிநித்துவம் அதிகமாக வழங்கும்போது சமூகத்திலும், அவர்களுக்கான அடிப்படை உரிமையும் அங்கிகாரமும், கிடைக்கிறது. இதனால் தன்னம்பிக்கையும், முன்னேற்றமும் ஏற்பட்டு மகளிர் தங்களையும், நாட்டையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வழிவகுப்பதோடு, இது அவர்களின் வளர்ச்சிக்கு மேலும் ஓர் மைல் கல்லாக அமையும்.

தற்பொழுது மகளிர்க்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதால், வருங்காலங்களில், பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மகளிர்க்கான பங்களிப்பு அதிகரிக்கும். எதிர்கட்சிகள் இந்த இட ஒதுக்கீட்டை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் மகளிர்க்கு அளிக்கும் உரிமையை, அங்கிகாரத்தை, பகிர்ந்தளிக்கும் நிகழ்வாக பார்க்க வேண்டும், தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் என்றும் துணை நிற்கும். புதிய பாராளுமன்ற கட்டடத்தில். புதிய தொடக்கமாக வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை கொண்டு வந்த பிரதமர் மோடி அவர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும், மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்களை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் என அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்