அனைத்து மொழிகளுக்கும் தமிழ் தான் தாய்மொழி – அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், ஊழல் செய்தவர்கள் சிறையில் இருப்பார்கள் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை.
சென்னை தாம்பரத்தில் நடைபெற்று வரும் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழியாக தமிழ் மொழி விளங்குகிறது. தமிழகத்தின் பெருமையான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியதற்கு பிரதமருக்கு நன்றி கூறுவோம். பிரதமர் மோடிக்கு திருக்குறள் வழிகாட்டும் நூலாக திகழ்கிறது.
தமிழகம் சிறந்த கலாச்சாரம் உடைய மாநிலம், சென்னையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் ராஜ ராஜ சோழன், சேரர்கள் கடற்படையில் திறமையாக விளங்கினர். நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தமிழ் மொழி தான் தாய் என புகழாரம் சூட்டினார். மத்திய பாஜக அரசின் சிறப்பான செயல்பாடுகளால் இந்தியா என்ன சொல்ல போகிறது என உலக நாடுகள் காத்திருக்கின்றனர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் திமுக அரசு ஊழல் செய்வதை இந்தியா முழுவதும் பார்க்கிறது. தமிழகத்தில் ஒரே ஒருமுறை பாஜவை ஆட்சியில் அமர்த்துங்கள், ஊழலற்ற ஆட்சியை தருகிறோம். பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், ஊழல் செய்தவர்கள் சிறையில் இருப்பார்கள். பாஜக வளர்ச்சிக்காக கட்சி நடத்துகிறது.
ஆனால், பிற கட்சிகள் ஆட்சியை பிடிக்க நடத்துகின்றன. செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி தர்மத்தின்படி, அதிமுகவுக்கு உரிய மரியாதை அளிக்க தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.