பட்ஜெட்டில் முக்கிய ‘அடையாள’ மாற்றம் : தமிழுக்கு ‘ரூ’ முக்கியத்துவம்!
கடந்தண்டு பட்ஜெட் தாக்கல் வரையில் ரூபாய் மதிப்பீட்டை குறிக்க ₹ சின்னம் குறிப்பிடப்பட்ட நிலையில் தற்போது தமிழக பட்ஜெட்டில் தமிழ் எழுத்தான ரூ குறிப்பிடப்பட்டது.

சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதுவே தற்போது ஆளும் திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் ஆகும். 2026ஆம் ஆண்டு தேர்தல் வரும் என்பதால் அப்போது இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.
நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று தமிழக அரசு பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தனிநபர் ஆண்டு வருமானம் 2.78 லட்சமாக அதிகரித்துள்ளது. இது தேசிய சராசரியைவிட 1.64 மடங்கு அதிகம் என்றும் முக்கிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த வழக்கமான தகவலை அடுத்து தற்போது மிக முக்கிய அப்டேட் ஒன்று இந்த பட்ஜெட்டில் நிகழ்ந்துள்ளது. இந்திய ரூபாயின் இலச்சினை (அடையாளம்) ₹ என அடையாளப்டுத்தப்பட்டதில் இருந்து அதனை தான் தமிழக அரசு பட்ஜெட்டில் ரூபாய் மதிப்பீட்டை குறிப்பிடுகையில் குறிப்பிட்டு வருகிறது.
ஆனால், இந்த முறை ₹ குறியீட்டிற்கு பதிலாக தமிழ் எழுத்தான ரூ என்பதை ரூபாயின் அடையாள இலச்சினையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மாற்றம் தேசிய அளவில் மிக முக்கியத்துவம் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்கிறது என திமுக, அதிமுக என பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசின் இந்த ரூ அடையாள மாற்றம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.