தாம்பரம் ரயில் ரத்து: நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சென்னை கடற்கரை- தாம்பரம் செல்லும் இரயில்கள் நாளை பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்பதால் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னை : தொடர் விடுமுறை, முகூர்த்தம், மிலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தொடர் விடுமுறை எதிரொலி காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அ லைமோதுகிறது. முன்பதிவு செய்யப்படாத பேருந்துகளில் ஏற பயணிகள் முண்டியடிக்கின்றனர். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இல்லை என புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளால் நாளை (15.09.2024) காலை 9 மணி முதல மாலை 7 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதனால், பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள், தி.நகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், தேவைக்கேற்ப இது அதிகரிக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை (15.09.2024) காலை 09.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் தற்போது… pic.twitter.com/Zu3qo50vgU— MTC Chennai (@MtcChennai) September 14, 2024
இதனிடையே, கோவையில் இருந்து வெளியூர்களுக்கு செப்டம்பர் இன்று முதல் 17 வரை 75 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். வார இறுதி, சுபமுகூர்த்தம், பௌர்ணமி, மிலாடி நபி ஆகியவற்றை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.