மேகதாது அணை தொடர்பாக,மத்திய அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை – அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி பயணம்..!
மேகதாது அணை தொடர்பாக,நாளை மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று இரவு டெல்லி பயணம்.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு குடிநீர் வழங்க ஏதுவாகவும், மின் உற்பத்திக்காகவும் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே 9,000 கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கொண்டு வந்தது.அணை கட்டும் திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து,காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்குத் தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவிக்காது என நம்புவதாக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேற்றுக் கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது:,”4.75 டி.எம்.சி தண்ணீர் தேவைக்காக கர்நாடக அரசு 67.16 டி.எம்.சி கொள்ளளவுள்ள அணையை மேகதாதுவில் கட்ட முயல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.தமிழ்நாட்டுக்கான நீர் அளவைக் குறைக்கும் மேகதாது அணை திட்டத்தைக் கர்னாடக அரசு கைவிட வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,மேகதாது அணை தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசுவதற்காகத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று இரவு டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அதன்பின்னர்,மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை,தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை டெல்லியில் சந்திக்கவுள்ளார்.
அந்த சந்திப்பில் மேகதாது,முல்லை பெரியாறு,காவிரி நதிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்த கோரிக்கை மனுவை மத்திய அமைச்சரிடம் துரைமுருகன் அவர்கள் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.