இந்துக் கடவுள்களை இழிபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்க – ஓபிஎஸ்

o.panneerselvam

சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வகையில் இந்துக் கடவுள்களை இழிபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக என ஓபிஎஸ் அறிக்கை.

இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் முரணான வகையில், மதத்தையும், மதக் கடவுள்களையும் இழிவுபடுத்திப் பேசுவது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்திய நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சமயச் சுதந்திர உரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி, அனைத்து மக்களும் தனிப்பட்ட முறையில் ஒரு மதத்தின்மீது நம்பிக்கை வைத்து வழிபாடு செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், எந்த ஒரு மதத்தையும் இழிபடுத்துவது என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

ஒரு மதத்தை இழிவுபடுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது. அவ்வாறு ஒருவர் ஒரு மதத்தை இழிவுபடுத்திப் பேசினால் அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசு உண்டு. இந்தச் சூழ்நிலையில், விடுதலை என்னும் புனைப்பெயரில் ஒருவர் ஒரு நிகழ்ச்சியில் இதிகாச புராணமான இராமாயணத்தையும், மக்கள் வணங்கக்கூடிய ராமர், லட்சுணர், சீதை, அனுமார் போன்ற இந்துக் கடவுள்களை இழித்தும், பழித்தும் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இது கடும் கண்டனத்திற்குரியது. இது, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காவல் துறையினரிடம் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த மதத்தினரை புண்படுத்திப் பேசினாலும் அதனை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கும்.

எனவே, இதுபோன்ற செயல்கள் சட்டம் ஒழுங்கை சீரழிக்கவும், மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கவும் மற்றும் மத மோதல்களை உருவாக்கவும் வழி வகுக்கும் என்பதால்,முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தியவர்கள்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறமால் இருக்க வேண்டுமென்றும் அதிமுக சார்பில் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்