“நீங்களே ஒரு கல் எடுத்து கொடுங்கள்.,” களத்தில் இறங்கிய தூத்துக்குடி எம்பி கனிமொழி.!
தூத்துக்குடியில் ஆய்வு செய்தபோது கட்டுமானத்திற்கு தரமில்லாத கற்கள் இருந்ததை பார்த்து திமுக எம்பி அதிர்ச்சியடைந்துள்ளார்.
தூத்துக்குடி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. எனவே, இதன் காரணமாக மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மும்மரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏனென்றால், இதே சமயம் கடந்த ஆண்டு தூத்துக்குடி, மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்குத் தேவையான அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை, தூத்துக்குடி எம்பி கனிமொழி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, இன்று வல்ல நாடு – மணக்கரை கீழக் கால் கண்மாய், மருதூர் அணைக் கட்டு, சென்னல் பட்டி உள்ளிட்ட வசவப்பபுரம் குட்டைக் கால் குளம், தூத்துக்குடியில் பராமரிப்புப் பணிகள் நடக்கும் பல இடங்களில் கனிமொழி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஸ்ரீ வைகுண்டம் கஸ்பா குளம் பகுதியில் ஆய்வு செய்தபோது தான் அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயம் நடந்தது.
ஏனென்றால், அந்த பகுதியில் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப் பட்ட கற்களைத் தொட்டுப் பார்த்து ஆய்வு செய்த அவர் அந்த கற்கள் தரமில்லாதது என்பதைக் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தார். பிறகு கோபத்துடன் ஒப்பந்ததாரரிடம் இந்த கற்கள் தரமான கற்களா? நீங்களே சொல்லுங்கள்… எனக் கேள்வி எழுப்பினார். கேள்வியை எழுப்பிய பிறகு தலையைக் குனிந்து கொண்டு என்ன பதில் சொல்வது என்று ஒப்பந்ததாரர் திகைத்துப் போய் நின்றார்.
பிறகு இந்த கற்களின் தரத்தை உறுதி செய்ய உத்தரவிட்டார்.அது மட்டுமின்றி, ஆய்வுக்கு உட்படுத்த நாடாளுமன்ற அலுவலகத்திற்குக் கொண்டு செல்வதற்காக அங்கிருந்த சில கற்களை தன்னுடைய காரில் எடுத்து வைக்குமாறும் உத்தரவிட்டார்.