கத்திக்குத்து எதிரொலி : ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகள் உடன் வருபவர்களுக்கு டேக் கட்டாயம்!
கிண்டி சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உள்நோயாளிகள் உடன் வருபவர்களுக்கு டேக் கட்டாயம்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் விக்னேஷ் என்பவரை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த பாலாஜி அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலரும் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். தமிழக அரசும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் தெரிவித்து இருந்தார்கள்.
இந்த சூழலில், இது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக ராஜீவ்காந்தி மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகள் உடன் வருபவர்களுக்கு டேக் கட்டாயம் என்ற விதியை அறிவித்துள்ளது. அதன்படி, இனிமேல், ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு உள்நோயாளிகள் உடன் வருபவர்களுக்கு கொடுக்கப்படும். அது இருந்தால் மட்டும் தான் மருத்துவமனைக்குள் அனுமதி என அறிவித்துள்ளனர்.
மேலும், ஏற்கனவே, அனைத்து மருத்துவமனைகளிலும் அட்டண்டர்களை குறைப்பதற்கு அடையாள அட்டை வழங்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் CCTV பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது எனவும் மா.சுப்ரமணியன் தெரிவித்து இருந்தார். அதன் ஒரு பகுதியாக தான் இப்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையில் டேக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.