அரசு பள்ளியில் நவீன கல்வி…. கரும்பலகை வேண்டாம்..! டேப் – லெட் போதும்..!

Default Image

நவீனமுறையில் டேப் லெட்(tap let) மூலம் சேலம் மாவட்டத்தில் கிராமப்புறத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஒன்றில்   படங்களையும் எழுத்துக்களையும் சுட்டிக்காட்டி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகின்றது. ஆசிரியைகளின் புதிய முயற்சியால் மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி பயின்று வருகின்றனர்.

சேலம்-ஏற்காடு மெயின்ரோட்டில் கொண்டப்பநாய்க்கன்பட்டியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தான், நவீன ஆரம்ப கல்வி முறையில் கற்பிக்கப்படுகின்றது.

1955ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது முதல், கால மாற்றத்துக்கேற்ப தன்னை புதிப்பித்து இன்னும் சிறந்தப்பள்ளியாக தொடர்ந்து நீடித்து வருகிறது. நடப்பாண்டு முதலாம் வகுப்பில் சேர்ந்த 55 மாணவர்களையும் சேர்த்து, மொத்தம் 220 குழந்தைகள் இந்த பள்ளியில் படிக்கின்றனர். பாடங்களை குழந்தைகள் மனதில் எளிதில் பதிய க்யூ ஆர்’ கோடு மூலம் டேப் லெட்டில் பதிவேற்றம் செய்து கற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஆசிரியர்கள் இறங்கியுள்ளனர்.

முதல் கட்டமாக தற்போது 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை 28 டேப்லட் வழங்கப்பட்டு தற்போது அதில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதற்கு பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கரும்பலகையில் படம் வரைந்து நடந்தப்பட்ட பாடங்கள் டேப் லெட் மூலமாக மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இந்த நவீன முறைக்கு மாறியதால் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகின்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் பாடங்களை புரிந்துகொண்டு இயல்பாகவே கற்பதால் , அவர்களிடம் கற்றல் திறனும் மிக வேகமாக வளர்வதாக சுட்டிக்காட்டுகின்றனர் பள்ளி ஆசிரியர்கள்

நோட்டுகள், தேர்வுத் தாள்களில் எழுதுவதை விடவும் கம்ப்யூட்டரில் எழுதுவதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களிடம் கூட கற்றல் வேகம் அதிகரிப்பதை உணர முடிவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தற்போது இந்த பள்ளியில் புரொஜக்டர் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. பாடப் புத்தகங்களில் உள்ள பல பாடங்களை அனிமேஷன் பட வடிவில் உருவாக்கி. புத்தகங்களில் படிக்கும் பாடங்களை காட்சி வடிவில் பெரிய திரைகளில் பார்க்கும்போது மாணவர்கள் பாடங்களை மிக எளிதாக புரிந்து கொள்வதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அதேபோல் தேர்வும் டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகின்றது. அதாவது ‘க்யூ ஆர்’ கோடு வடிவில் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. மாணவர்கள்‘க்யூ ஆர்’ கோடு படத்தை ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கேன் செய்து அதில் உள்ள விவரங்களை பார்த்து எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்த பிறகு ‘சமர்ப்பி’ என்ற பொத்தானை கிளிக் செய்தால் மாணவர்கள் அளித்த விடை சர்வரில் சேமிக்கப்பட்டு விடுகிறது.

மேலும், மாணவர்கள் அப்போதே வேறொரு பொத்தானை கிளிக் செய்து தாங்கள் அளித்த விடை சரிதானா என்பதையும், மொத்தம் எத்தனை மதிப்பெண்கள் பெற்றுள்ளோம் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும் என்கின்றனர் ஆசிரியர்கள்..!

காலமாற்றத்துக்கு ஏற்ப கல்வி கற்பித்தல் முறைகளையும் நவீனப்படுத்தினால் மட்டுமே அரசு பள்ளிகள் தனியார் பள்ளிக்களுக்கு சவாலாக விளங்கும் என்பதற்கு சான்றாக விளங்கிறது இந்த முன் மாதிரி பள்ளிக்கூடம்..!

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்