த.வெ. மாநாடு : விஜய் எப்போ வருவார்? நிகழ்ச்சி நிரல் விவரம் இதோ!
தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு இன்று பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது .
விக்கிரவாண்டி : த.வெ.க தொண்டர்கள் அனைவரும் காத்திருந்த கட்சியின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறுகிறது. எனவே, மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார் என்பதைப் பார்க்க மாநாட்டிற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தொண்டர்களும், பொதுமக்களும் கூட்டம் கூட்டமாக வருகை தந்துகொண்டு இருக்கிறார்கள்.
மாநாடு தொடங்க இன்னும் சில மணி நேரங்கள் இருக்கிறது. ஆனால், அதற்குள் தொண்டர்கள் இன்று அதிகாலை முதலே மாநாட்டிற்குள் சென்று இடம் பிடித்து வருகிறார்கள். ஒரு பக்கம் மாநாடு நடைபெறும் இடத்தில் கிட்டத்தட்டப் பாதி அளவு கூட்டம் கூடிவிட்டது. இன்னும் சிறுது நேரத்தில் மொத்தமாக இடமே நிறைந்துவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மாநாடு எப்போது தொடங்கும்? விஜய் எப்போது வருகை தருவார்? எவ்வளவு நேரம் விஜய் பேசுவார்? என்கிற நிகழ்ச்சி நிரல் விவரம் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
மாநாடு நடைபெறும் நேரம்
- தொண்டர்கள் ஒன்றாகக் கூடியிருக்கும் த.வெ.கவின் பிரமாண்ட மாநாடு இன்று மாலை 4 மணி முதல் தொடங்கப்படவுள்ளது.
விஜய் பேச்சு மற்றும் வருகை
- மாநாட்டுக்குக் கட்சித் தலைவர் விஜய் சரியாக 5 மணிக்கு வருகை தரவுள்ளார். விஜய் வருகை தந்த பிறகு மாநாடு குறித்துத் தொடக்க உரை ஒன்று அமைந்துள்ளது. பிறகு விஜய் கட்சிக் கொடியை ஏற்றவுள்ளார்.
- அதன் பிறகு கட்சியின் கொள்கை என்ன? செயல்திட்டம்பற்றிய அறிவிப்புகளும் வெளியாகவுள்ளது.
- மாநாட்டில் விஜய்யின் உரை இரண்டு மணி நேரம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அதிகபட்சமாக 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மாநாடு முடியும் நேரம்
- த.வெ.க மாநாடு சரியாக இரவு 9 மணிக்கு முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏனென்றால், விழுப்புரத்தை விட்டு வெளியேறவே கிட்டதட்ட 3 மணி நேரம் ஆகும் எனவே, 9 மணிக்குக் கிளம்பினாள் தான் சரியாக இருக்கும் என்பதால் மாநாட்டை 9 மணிக்கு முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே, இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்த கட்சி பாடல் ஒன்று கட்சிக்கொடி அறிமுகம் செய்தபோது வெளியிடப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து மாநாட்டிலும் ஒரு கட்சி பாடல் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.