த.வெ.க. மாநாட்டிற்கு சென்று காணாமல் போன மாணவன்! வீடு திரும்பியது எப்படி?
த.வெ.க. மாநாட்டிற்கு சென்று காணாமல் போனதாக கூறப்பட்ட தனது மகன், வீடு திரும்பியதும் அவரை பார்த்த தாய் கட்டியணைத்து கதறி அழுதார்.
கிருஷ்ணகிரி : விக்கிரவாண்டி வி.சாலையில் விஜய் நடத்திய பிரமாண்ட த.வெ.க மாநாட்டை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்திருந்தார்கள். அதில் ஒருவர் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரன். இவர் மாநாட்டில் கலந்து கொள்ள அந்த மாவட்டத்தில் இருந்து மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் வந்த வேனில் வருகை தந்துள்ளார்.
பிறகு மாநாடு நடந்து முடிந்தபின் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் எந்த இடத்தில் தாங்கள் வந்த வேன் பார்க்கிங் செய்யப்பட்டது என்பது தெரியாமல் காணாமல் போகியுள்ளார். தன்னுடைய மகனும் மாநாட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வருவான் என அவருடைய தாய் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், மாநாட்டுக்குச் சென்ற அனைவரும் வீட்டிற்குத் திரும்ப மகேஸ்வரன் மட்டும் வீடு திரும்பவில்லை.
மகேஸ்வரன் மாநாட்டில் வைத்து தொலைந்து போன தகவலைக் கேட்டதும் அவருடைய அம்மாவின் மனது மிகவும் வேதனையுடன் அவனைத் தேடத்தொடங்கியது. காவல்துறையிலும் உறவினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மகேஸ்வரனும் கையில் போன் மற்றும் பணம் எதுவும் கொண்டு போகவில்லை என்பதால் சில சிரமங்களையும் சந்தித்துள்ளார். சந்தித்த சிரமங்கள் மற்றும் எப்படி வீடு திரும்பினார் என்பது பற்றி அவரே ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்தார்.
இது குறித்துப் பேசிய அவர் ” மாநாடு முடிந்த பிறகு 3 பார்க்கிங் ஏரியா இருந்தது அதில் சென்று தொடர்ச்சியாக எங்களுடைய பேருந்தை நான் தேடினேன். ஆனால், என்னுடைய பேருந்து கிடைக்கவில்லை.பிறகு அப்படியே நடக்க ஆரம்பித்தேன். சரியாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு முன்பே இருக்கும் விக்கிரவாண்டி டோல்கேட் வரை நடந்துகொண்டே சென்றேன்.
அதன்பிறகு, ஒரு லாரி வந்தது அவர் என்னைப் பார்த்து விசாரித்து எனக்கு லிப்ட் கொடுத்தார். அவரும் எதோ ஒரு ஞாபகத்தில் சேலத்தில் இறக்கிவிட்டார். பேருந்தில் செல்ல பணமும் கொடுத்தார். சேலத்தின் தலைவாசல் என்கிற பகுதியிலிருந்து பேருந்தில் நான் புறப்பட்டேன். அதன்பிறகு காசு குறைவாக இருந்த காரணத்தால் பாதியில் இறங்கினேன்.
பிறகு சேலத்திற்குள் மட்டுமே கிட்ட தட்ட 54 கிலோமீட்டர் நடந்தேன். நான் நடப்பதைப் பார்த்துக்கொண்டு இருந்த ஒரு பெரியவர் என்னைப் பார்த்து என்ன விஷயம் எதற்காக நடந்து கொண்டு இருக்கிறாய்? என விசாரித்தார். நான் நடந்த விஷயங்களைப் பற்றிச் சொன்னேன். அதன்பிறகு எனக்குச் சாப்பாடு வாங்கி கொடுத்து எனக்குத் துணி எடுத்துக்கொடுத்து பஸ் ஏற்றிவிட்டார். நானும் வீட்டிற்கு வந்துவிட்டேன்” என அந்த மாணவன் தெரிவித்தார்.
எப்படியோ தன்னுடைய மகன் வீடு திரும்பிவிட்டான் என அவருடைய தாயாரும் கண்கலங்கி மகனைக் கட்டிப்பிடித்து அழுதார். இந்த மாணவன் வீட்டிற்கு திரும்ப உதவி செய்த அந்த பெரியவர் யார் என்று தெரியவில்லை என்றாலும் அவருக்குப் பாராட்டுக்கள் என மக்கள் பாராட்டி வருகிறார்கள்.