தி.மலை நிலச்சரிவு : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்ததோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

tiruvannamalai landslide cm stalin

திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக, வ.உ.சி. நகர் 11-வது தெருவில் வசித்து வந்த திரு.ராஜ்குமார் என்பவரது வீட்டின் மீது டிசம்பர் 1-ஆம் தேதி மரம் விழுந்ததை அறிந்து அவர் வீட்டின் கதவினை திறக்க முற்பட்டபோது மலையிலிருந்து பெரிய பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் விழுந்தது.

இதன் காரணமாக, அவரது வீடு மண் மற்றும் பாறையால் மூடப்பட்டு இடிந்துள்ளது. இதனையறிந்து மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக  தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  மீட்புபடை,  கமாண்டர் உட்பட 39 வீரர்கள் நேற்று இரவு முதல் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதுவரை மொத்தமாக 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 3 பேரை மீட்கவேண்டும் என உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இரவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் தற்காலிகமாக மீட்பு பணியும் நிறுத்தப்பட்டது.‌ விரைவில் மீண்டும் மீட்பு பணி தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் துரதிஷ்டவசமாக மண்ணில் சிக்கி இருந்த யாரும் உயிரோடு இல்லை. அந்த வீட்டின் உள்ளே இருந்த ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீனா (வயது 27), மகன் கௌதம் (வயது-9), மகள் இனியா (வயது-5), பக்கத்து வீட்டில் வசித்து வரும் சரவணன் என்பவரின் மகள் ரம்யா (வயது-7, மஞ்சுநாதன் என்பவரின் மகள் விநோதினி (வயது-14) மற்றும் சுரேஷ் என்பவரின் மகள் மகா (வயது-7) ஆகிய ஏழு நபர்கள் மண்ணுக்கடியில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு அவர்களுடைய குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் ” இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என மு.க.ஸ்டாலின் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்