கோவை கார் வெடிப்பு : மாநகர காவல்துரைக்கு வெகுமதி.! டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு.!
குறுகிய காலத்திற்குள் விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட கோவை மாநகர காவல்துறைக்கு பாராட்டுக்கள். – டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்கள் சந்திப்பு.
கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தான் தற்போது வரையில் தமிழகத்தில் தலைப்பு செய்தி. இந்த சம்பவத்தில் ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்துவிட்டார். அவருடன் தொடர்புடைய 6 நபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்கள்.
இந்த வழக்கானது தமிழக காவல்துறையிடம் இருந்து முதல்வர் பரிந்துரையின் பேரில் என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ இந்த வழக்கை ஏற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, கோவை சென்று கோவை மாநகர் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சைலேந்திர பாபு பேசுகையில், ‘ குறுகிய காலத்திற்குள் விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்.’ என தெரிவித்தார்,
மேலும், ‘ கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறைக்கு பாராட்டுக்களும், வெகுமதிகளும் அளிக்கப்பட்டது. முதல்வர் கோரிக்கையின் பேரில், உள்துறை அமைச்சகம் உத்தரவின்படி என்ஐஏ அதிகாரிகள் இந்த வழக்கை விசாரிக்க உள்ளனர் .’ என தெரிவித்தார்.
அடுத்ததாக, ‘ காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் என்ஐஏ வசம் ஒப்படைக்கப்படும். என்ஐஏவுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு வழங்கும். புலன் விசாரணை நடைபெற்று வருவதால் முழுதாக கூற முடியாது. ‘ என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.