இவர்களுக்கு “ஊஞ்சல் இதழ்” அவர்களுக்கு “தேன் சிட்டு இதழ்” – பள்ளிக்கல்வித்துறை அதிரடி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதமிருமுறை தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு “ஊஞ்சல் இதழ்” வெளியிட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கவும் அவர்களின் உள்ளார்ந்த படைப்புத் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழும், உயர்வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழும் மாதமிருமுறை வெளியிடப்படும் என்றும் ஆசிரியர்களுக்கான படைப்புத் தளத்தை உருவாக்கவும், சிறந்த கற்றல் கற்பித்தல் முறைகளைப் பரிமாறிக் கொள்ளவும் “கனவு ஆசிரியர்” என்ற மாத இதழ் வெளியிடப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதமிருமுறை தொடக்க வகுப்பு மாணவர்களுக்கும “ஊஞ்சல் இதழ்”, உயர் வகுப்பு மாணவர்களுக்கு “தேன் சிட்டு” இதழ், ஆசிரியர்களுக்கு “கனவு ஆசிரியர்” இதழை வெளியிட உத்தரவிட்டும், ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ இதழும், உயர் வகுப்பு மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ இதழும் மாதமிருமுறை வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த இதழ்களில் தேசிய மாநில செய்திகள் மட்டுமன்றி அந்தந்த மாவட்டச் செய்திகளும் மாவட்டத்திலுள்ள மாணவர்களின் படைப்புகளும் இடம் பெறும் என தெரிவித்துள்ளது.
இவ்விதழ்களை வகுப்பறைச் சூழலுடன் நயம்பட இணைத்து வாசிப்பை பேரியக்கமாக மாற்றும் வண்ணம் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் கதை, கட்டுரை, கவிதை, ஓவியம், பேச்சு உள்ளிட்ட பல்வேறு படைப்புத் திறன்களை வெளிக்கொணர போட்டிகளும் மாணவர்களை ஊக்குவிக்கப் பயிற்சிப் பட்டறைகளும் வல்லுநர்கள் மூலமாக நடத்தப்படும். இதுமட்டுமன்றி ஆசிரியர்களுக்கென தனித்துவமான படைப்புத் தளத்தை உருவாக்கவும், சமகாலத்தில் உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளது.