ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்.., முதல்வர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க அதிமுக முன்னாள் எம்.பி கோரிக்கை!

Default Image

ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கோரிக்கை.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும் என்ற திமுக தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டமபர் மாதம் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 90% விசாரணை நிறைவடைந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக அப்போலோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றது. இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தடை காரணமாக எதுவும் நடக்கவில்லை. கோடிக்கணக்கில் அரசுப்பணம் செலவிடப்பட்டது தான் மிச்சம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி, உச்சநீதிமன்றத்தில் உள்ள தடையை விரைந்து நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க செய்து, ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அம்மா அவர்கள் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று முடிவு வந்தால் ஒவ்வொரு அஇஅதிமுக தொண்டனும் அளவற்ற மகிழ்ச்சி அடைவதோடு நிம்மதிப் பெருமூச்சும் விடுவான். சரியாக 100 நாட்களில் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள் வருகிறது. அதற்குள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இதனை நிச்சயம் செய்வார் என்று நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்