செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்தி வைப்பு – உயர்நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு!
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததற்கு எதிராக வழக்கு.
தமிழக அரசின் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் ஆர்என் ரவி நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். ஆளுநரின் இந்த அறிவிப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். அமைச்சரை நீக்கவோ, சேர்க்கவோ முதலமைச்சருக்கே அதிகாரம் உள்ளது, ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றனர்.
இதுபோன்று ஆளுநருக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்த நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவுறுத்தலின் பேரில் செந்தில் பாலாஜியின் நீக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மறு உத்தரவு வரும் வரை செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக ஆளுநர் தெரிவித்திருந்தார்.
இதன்பின் முதலமைச்சரும், ஆளுநரும் கடிதங்கள் மூலம் மோதி கொண்டனர். பின்னர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என குறிப்பிட்டு ஆளுநருக்கு முதலமைச்சர் பதில் கடிதம் அனுப்பியிருந்தார். அரசியலமைப்பு சட்டப்படி, அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அமைச்சராக யாரை நியமிக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் உரிமை எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்எல் ரவி தொடர்ந்த வழக்கு அடுத்தவாரம் விசாரணைக்கு வருவதாக கூறப்படுகிறது. அரசியல் சாசனப்படி எடுத்த முடிவை ஆளுநர் மறுபரிசீலனை செய்ய முடியாது. ஆளுநர் தனது முடிவு குறித்து ஆலோசனை பெற வேண்டிய அவசியமில்லை. எனவே, செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக அறிவித்த ஆளுநரின் கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.