அரசாணை எண் 115 நிறுத்தி வைப்பு – முதலமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு!
அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் உடனடியாக செயல்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் பாராட்டு.
குறுகிய கால பணியிடங்களை தனியார் ஏஜென்சி மூலம் நிரப்புவது குறித்த அரசாணை எண் 115 நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் அறிவிப்பிற்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், தமிழக அரசுப் பணிகளுக்கான ஆள்தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றம் செய்தல், குத்தகை முறையில் பணியாளர்களை பெறுவது ஆகியவை குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்கான மனிதவள சீர்திருத்த குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழக அரசின் மனிதவளத்துறை இது குறித்து வெளியிட்ட அரசாணை எண் 115 சமூகநீதிக்கு எதிராக இருப்பதை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதில் உள்ள நியாயங்களை உணர்ந்தும், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றும் முதலமைச்சர் உடனடியாக செயல்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரத்தில் ஆய்வு வரம்புகளை மாற்றுவது மட்டுமே இந்த சிக்கலுக்கு தீர்வாகி விடாது.
மனிதவள சீர்திருத்தக் குழு அமைக்கப்படுவதன் நோக்கம் நிரந்தர பணி நியமனங்களை நிறுத்தி விட்டு, தற்காலிக, ஒப்பந்த முறை நியமனங்களை ஊக்குவிப்பது தான் என்றால் அந்த சமூக அநீதியை ஏற்க முடியாது. நிரந்தர பணி நியமனங்களே தொடரும். தற்காலிக, ஒப்பந்த முறை நியமனங்கள் அனுமதிக்கப்படாது என்று அரசு கொள்கை அறிவிப்பு வெளியிட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை என்றால் சமூக நீதிக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள மனிதவள சீர்திருத்தக் குழுவை கலைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றுள்ளார்.