மின்தடையால் திருப்பூர் மருத்துவமனையில் பறிபோன உயிர் – ஆட்சியர் விளக்கம்!
திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்தடையால் ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டு இரண்டு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரக்கூடிய திருப்பூர் அரசு மருத்துவமனையில் இன்று 3 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. அதன் காரணமாக நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் தடைபட்டதால், இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மருத்துவமனை முதல்வரிடம் விளக்கம் கேட்டபோது இருவரும் உடல்நல பாதிப்பு காரணமாகவே உயிரிழந்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அவர்கள் அரசு தலைமை மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மருத்துவ கல்லூரி கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட மின் துண்டிப்பால் தான் 40 நிமிடம் அளவிற்கு மின் தடை ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், மின் வயர் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காண்ட்ராக்டர் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ள மற்ற நபர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து மருத்துவமனை இயக்குனர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது மருத்துவ கல்லூரியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நபர்களை வேறு பகுதிக்கு மாற்றுவது குறித்து சுகாதாரத்துறையிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.