#BREAKING: 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..!
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையத்திற்கு நிறைய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் கால அவகாசம் வழங்கப்படாது. மேலும் நாங்கள் மாநில அரசுக்கு 3 மாதம் அவகாசம் தருகிறோம். அதற்குள் 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தி முடித்து இருக்க வேண்டும், தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்க வேண்டும், வாக்கு முடிவுகளையும் அறிவித்திருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் குறைந்ததும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் மேலும் 9 மாவட்டங்களில் நடத்தப்படாமல் இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.