உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் – உச்சநீதிமன்றம்
உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பூர் அனல்மின் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு சுற்றுசூழல் அனுமதி பெறுவதில் விதிகளை கடைபிடிக்கவில்லை எனக்கூறி, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை காளிமுத்து என்பவர் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்த திட்டமிடப்பட்ட 1,342 ஏக்கர் நிலத்தில் பெரும்பாலான நிலங்கள் விவசாய நிலங்கள் என்றும், எந்த பொது விசாரணை நடத்தப்படவில்லை என்றும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு முறையாக நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்க வழங்கிய ஒப்புதல் முறையாக வழங்கப்படவில்லை என கூறி அதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தின் தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையானது, இன்று உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் குமரன் மற்றும் நரசிம்மன் ஆகியோர் ஆஜராகி இருந்தார்கள்.
இதனையடுத்து, இந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதால் மாதத்திற்கு 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும், அங்கு இருக்கக் கூடிய கருவிகள் மற்றும் பொருட்கள் பழுதடைந்து விடும் என்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து, உததரவுகளை பிறப்பித்த நீதிபதி, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், தொடர்ந்து அனல்மின்நிலையம் இயங்க அனுமதி அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மனுதாரர் மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சகம் பதிலளிக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.