இனி பல்கலைக்கழக வேந்தர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்., ஆளுநருக்கு எதிரான தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இதோ….
பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் நியமனம் உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்துள்ளது என திமுக எம்.பி.வில்சன் தெரிவித்துள்ளர்.

சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே சட்டப்பேரவையில் அரசு அளிக்கும் உரையை வாசிக்க மறுப்பது முதல் சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்துவது வரையில் பல்வேறு செயல்பாடுகளை ஆளுநர் மேற்கொண்டு வந்தார்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை குறிப்பிட்டு, ஆளுநர் , மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால அவகாசம் நிர்ணயம் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிவுற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் , மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் காலம் தாழ்த்துவது சட்டத்திற்கு எதிரானது எனவும், ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே தங்கள் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியும் உத்தரவிட்டது.
ஆளுநர் செயல்பாடுகள் குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு குறித்து திமுக எம்பியும் , வழக்கறிஞருமான வில்சன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் :
அவர் கூறுகையில், ” மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் என்ன மசோதா நிறைவேற்றம் செய்கிறதோ அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். மக்களால் தேர்வு செய்ப்பட்ட அமைச்சரவையின் கீழ் சட்டவிதிமுறைக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். சட்டசபையில் மசோதா இயற்றி அனுப்பும் போது காலம் தாழ்த்த கூடாது. உடனடியாக ஒரு மாதத்திற்குள் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.” என கூறினார் .
மேலும், ” தமிழக சட்டப்பேரவையில் வெவ்வேறு காலகட்டத்தில் தமிழக அரசால் இயற்றப்பட்ட 10 மசோதாக்கள் மீது ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் என உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தலின் பெயரில் வழக்கு தாக்கல் செய்தோம்.
வேந்தராக முதலமைச்சர்
தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் வேந்தராக ஆளுநர் இருக்கிறார். இதனால், பல்கலைகழக துணை வேந்தர் பதவி நியமனம் உட்பட பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் தலையீடு செய்கிறார். எனவே. பல்கலை கழக வேந்தராக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்ட மாநில முதலமைச்சர் வேந்தராக இருக்க வேண்டும் என்ற மசோதா,
டிஎன்பிஎஸ்சி பணிநியமனங்கள் தொடர்பான மசோதா உட்பட 10 மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் நிலுவையில் உள்ளது. இதற்கு உச்சநீதிமன்றமே தங்கள் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அந்த 10 மசோதாக்களும் இன்று முதல் நடைமுறைக்கு வரும்படி உத்தரவிட்டுள்ளனர். இதனால் தற்போது பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் ஆளுநர் ரவி தற்போது அந்த பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்.
காலம் தாழ்த்த கூடாது
இனி வரும் காலங்களில் எந்தவொரு மசோதாக்கள் சட்டப்பேரவையிலோ, அமைச்சரவையிலோ நிறைவேற்றம் செய்யப்பட்டால் கால தாமதம் செய்யாமல் உடனடியாக ஒப்புதல் அளித்து நடந்துகொள்ள வேண்டும். ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டிய குறிப்பிட்ட மசோதாக்களையும் காலம் தாழ்த்தாமல் அனுப்ப வேண்டும். மசோதா ஆளுநருக்கு வந்துவிட்டால் 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டிய மசோதா என்றால் 3 மாத காலத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
முதலமைச்சர் தமிழ்நாட்டின் நலன் மட்டும் கருதாமல் இந்தியாவின் மாநில சுய ஆட்சியை இந்த வழக்கின் தீர்ப்பு மூலம் நிலைநாட்டி உள்ளார். இந்த தீர்ப்பு தமிழக ஆளுநருக்கு மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து ஆளுநர்களுக்கும் இது பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது” என திமுக எம்பி வில்சன், ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025