பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை – திருமாவளவன் ட்வீட்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இவர் தற்போது பரோலில் வெளியே உள்ள நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், மத்திய அரசு தரப்பில் வழக்குரைஞருக்கும் இடையே காரசார வாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,’பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை; இது முழுமையான விடுதலைக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது. உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், இனிமேலும் முரண்டு பிடிக்காமல் ஒன்றிய அரசு பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை முழுமையாக விடுதலை செய்ய முன்வரவேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.