சட்டப்படி விசாரணை நடத்தலாம்… இபிஎஸ்-க்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய டெண்டர் முறைகேடு வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் முதலமைச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது.
இதையடுத்து டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் விசாரணையை நடத்த அனுமதிக்க வேண்டும், முந்தைய ஆட்சியில் நடத்திய லஞ்ச ஒழிப்பு துறையின் ஆரம்பகட்ட விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்பு துறை கோரியிருந்தது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம்.. எடப்பாடி பழனிசாமி கூறிய காரணத்தை ஏற்க மறுத்த ஐகோர்ட்!
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய டெண்டர் முறைகேடு வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, லஞ்ச ஒழிப்பு துறையான உங்களை தொடர்ந்து விசாரிக்க தடுப்பது என்ன? நீங்கள் விசாரிக்கலாமே, சட்டத்திற்கு உட்பட்ட எந்த விசாரணையையும் நீங்கள் தாராளமாக செய்யலமே? நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில் சட்டம் எதை அனுமதிக்கிறதோ, அதன்படி விசாரணை நடத்தலாம் எனவும் நீதிபதிகள் அனுமதி வழங்கி, எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய டெண்டர் முறைகேடு வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.