ரூ.4 கோடி பறிமுதல்! வெளியான முதல் தகவல் அறிக்கை… நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்!

Nainar Nagendran: ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்.
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கையில் மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக பணம் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு பணம் மற்றும் மற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்த சூழலில் கடந்த வாரம் 6ம் தேதி இரவு தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டதில் சதிஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று நபர்களிடம் இருந்து சுமார் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்து, அவர்களையும் கைது செய்திருந்தனர்.
கைதானவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்த மூன்று பேரும் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர்கள் என்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என அவர்கள் கூறியதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் மற்றும் தாம்பரம் காவல்துறை சோதனை நடத்தினர்.
மேலும் இந்த வழக்கின் அடிப்படையில் பாஜக பிரமுகரான கோவர்தன் என்பவருக்கு சொந்தமான ஓட்டலில் சோதனை நடத்தியதில் ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த வழக்கில் தாம்பரம் காவல்துறை FIR பதிவு செய்தது. இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என்றும் வாக்காளர்களுக்கு கொடுக்க தான் அந்த பணத்தை எடுத்து சென்றதாகவும் கைதானவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. நயினார் நாகேந்திரனின் அடையாள அட்டை மற்றும் உறுப்பினர் கார்டு பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே, ரூ.4 கோடி பணம் என்னுடையது இல்லை என்று நயினார் நாகேந்திரன் மறுத்திருந்த நிலையில், முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த வழக்கு தொடர்பாக நயினார் நாகேந்திரன் 7 நாட்களுக்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். நயினார் நாகேந்திரன் உறவினர் துரை என்பரிடம் காவல்துறை சம்மன் வழங்கியதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025