பெத்தவளுக்கு தெரியும் குழந்தை எங்க இருக்குனு வைரலாகும் சுஜித் பெற்றோரின் புகைப்படம்!
கடந்த 25-ம் தேதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில், மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையான சுஜித், வீட்டின் அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டான். இதனையடுத்து குழந்தையை மீட்பதற்கான பணிகள், 4 நாட்களை கடந்தும் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தமிழகமே குழந்தை சுஜித் மீண்டு வருவான் என மிகுந்த எதிர்பார்ப்போடும், பிரார்த்தனையோடும் காத்திருந்த நிலையில், 5-வது நாள் காலையில், குழந்தை சுஜித் சடலமாக தான் மீட்கப்பட்டான். குழந்தை சுஜித் சடலமாக மீட்கப்பட்டது குறித்து, பலரிடம் இருந்து பல விதமான கேள்விகள் எழுகிறது.
இந்நிலையில், குழந்தை சுஜித்தின் உடல் ஆழ்துளை கிணற்றில் இருந்து முழுவதுமாக மீட்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி வருகிற நிலையில், சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு தற்போது கான்கிரீட் கலவையால் மூடப்பட்டுள்ளது. அதன் மீது சுஜித்தின் பெற்றோர் மாலையிட்டவாறு அமர்ந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.