கொரோனா அச்சத்தால் ஏற்படும் தற்கொலை..! அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..! – ஓபிஎஸ்
கொரோனா அச்சத்தால் ஏற்படும் தற்கொலையைத் தடுக்க, ஆலோசனைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கொரோனா அச்சத்தால் ஏற்படும் தற்கொலையைத் தடுக்கவும், தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ ரீதியாக உதவுவதோடு, அவர்களுடைய மனநிலையை அறிந்து ஆலோசனைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘ உடலில் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்’ என்ற கவிமணியின் கூற்றும், ‘சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத இயலும்’ என்னும் பழமொழியும் உடலோம்பலின் இன்றியமையாமையை விளக்கினாலும், நோய்த் தொற்றுக் காலங்களில் அரிதாய்ப் பெற்ற மனிதப் பிறவியை போற்றிப் பாதுகாக்க உடல் உறுதி மற்றும் மருத்துவத்தோடு மன உறுதியும் மிகமிக அவசியமானதாகும். இந்த மன உறுதி நோய் பாதிக்கப்பட்டவர்களில் சிலரிடம் இல்லாததன் காரணமாக சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கல்லுமேடு எம்.ஜி.ஆர். நகர்ப் பகுதியைச் சேர்ந்த திருமதி லட்சுமி தனது மூத்த மகளை இழந்த வருத்தத்தில் இருந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலக் குறைவால் தனது கணவரும் உயிரிழந்ததையடுத்து, போதிய வருமானமின்றி தன்னுடைய மகன், இரண்டாவது மகள் மற்றும் பேரக் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், இரண்டாவது மகள் திருமதி ஜோதிகாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து சுகாதாரத் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் திருமதி ஜோதிகாவை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியதோடு, ஊராட்சி சார்பில் அவரது வீட்டில் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையறிந்த அருகிலுள்ளவர்கள், திருமதி ஜோதிகாவின் குடும்பத்தைச் சேர்ந்த யார் வெளியே வந்தாலும் அவர்களிடமிருந்து விலகிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டதால், அந்தக் குடும்பத்தினர் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளானதோடு, கொரோனா தொற்று தங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் வந்துவிடுமோ, அதனால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சத்திற்கு தள்ளப்பட்டனர்.
இந்த அச்சத்தின் காரணமாக திருமதி லட்சுமி, அவரது மகள் திருமதி ஜோதிகா, மகன் திரு. சிபிராஜ் மற்றும் பேரன் ரித்தீஷ் ஆகிய நான்கு பேரும் சாணிப் பவுடரை’ உணவில் கலந்து சாப்பிட்டு, ஆபத்தான முறையில் அனைவரும் வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் மயங்கிக் கிடந்ததாகவும், பின்னர் ஆம்புலன்சில் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு மருத்துவர்கள் நடத்திய சோதனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருமதி ஜோதிகா மற்றும் அவரது மகன் ரித்தீஷ் ஆகியோர் உயிரிழந்ததாகவும், திருமதி லட்சுமி மற்றும் திரு. சிபிராஜ் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இது அந்தப் பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தி எனக்கு ஆற்றொணாத் துயரத்தையும் மிகுந்த மன வேதனையையும் அளித்துள்ளது. மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய அஞ்சலியை செலுத்துவதோடு, அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருபவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
கொரோனாவுக்கான மருத்துவ சிகிச்சை மட்டுமல்லாமல், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையையும், குடும்பத்தில் உள்ளவர்களின் மன அந்தக் நிலையையும், அக்கம்பக்கத்தினரால் அவர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சலையும், அவர்களுடைய பொருளாதார நிலையையும் ஆராய்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு உதவி புரிவதும், ஆலோசனைகளை வழங்குவதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஓர் அரசாங்கத்தின் கடமை. இதைச் செய்ய அரசு நிர்வாகம் தவறுகின்றதோ என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, கொரோனாவால் மருத்துவ பாதிக்கப்பட்டவர்களுக்கு ரீதியாக உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய மனநிலையை அறிந்து அதற்கேற்ப ஆலோசனைகளையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், மேற்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சத்தால் ஏற்படும் தற்கொலையைத் தடுக்கவும், தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ ரீதியாக உதவுவதோடு, அவர்களுடைய மனநிலையை அறிந்து ஆலோசனைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். pic.twitter.com/WIi8dwMzz6
— O Panneerselvam (@OfficeOfOPS) January 10, 2022