திடீர் ஐடி ரெய்டு: ரூ.700 கோடி சொத்து ஆவணங்கள் கண்டுபிடிப்பு.!
ஈரோட்டில் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.700 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளன.
ஈரோடு தங்கப்பெருமாள் வீதியில் உள்ள ஸ்ரீபதி அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இதன் தலைமை அலுவலகம் இங்கு உள்ளது. இந்த நிறுவனத்தில் ஸ்ரீனிவாசன், சேகர் மற்றும் பூபதி ஆகியோர் இயக்குனர்களாக இருக்கின்றனர். இந்த நிறுவனம் கட்டுமான பணியில் பிரபலமாக விளங்குகிறது. குறிப்பாக அரசின் ஒப்பந்தங்கள் பெற்று கட்டுமானத்தை மேற்கொள்கின்றனர்.
இதைதவிர்த்து, மசாலா பொருட்கள் தயாரிப்பு, போக்குவரத்துக்கு, கல்குவாரி மற்றும் திருமணமண்டபம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள், குறிப்பாக கோவை, சேலம், ஈரோடு, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் திடீரென நுழைந்து அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டார்கள்.
இந்த சோதனை 4 நாட்கள் நடைபெற்றுள்ளது. 2வது நாள் நடைபெற்ற சோதனையில் ரூ.16 கோடியும், 3வது நாள் ரூ.4 கோடியும் கைப்பற்றப்பட்டது. இந்நிறுவனம் தமிழகம் மட்டும் இல்லாமல் கர்நாடகாவிலும் கட்டுமான ஒப்பந்தங்கள் பெற்று தொழில் செய்து வருகிறார்கள். பின்னர் இந்நிறுவனத்தின் சொத்துக்கள் குறித்து அதிகரிக்கள் ஆய்வு நடத்தினர். அப்போது, ரூ.700 கோடி சொத்து ஆவணங்களை கைப்பற்றப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.