ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
சென்னையிலுள்ள ரேஷன் கடைகளுக்கு நேற்று திடீரென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நியாயவிலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டை, நந்தனம் மற்றும் லாயிட்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 6 ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று மேற்பார்வையிட்டார். அப்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்துள்ளார்.
அங்கு கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கொரோனா நிவாரணத்தொகையான 2000 ரூபாய் மற்றும் 14 அத்யாவசிய மளிகை பொருட்கள் ஆகியவை குறித்து முதல்வர் ஸ்டாலின் மேற்பார்வையிட்டுள்ளார். மேலும், ரேஷன் கடை ஊழியர்களிடம் மக்களுக்கு காலம் தாழ்த்தாமல் விரைவாக இப்பணிகளை சிறப்பாக செய்து முடிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
பின்னர், பொது மக்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் பொருட்களை குறித்து கேட்டுள்ளார். பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்படுகிறதா..? என்பதை விசாரித்துள்ளார். அதனை தொடர்ந்து அங்கிருக்கும் மக்களுக்கு கொரோனா நிவாரண தொகை ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்களின் தொகுப்பினை வழங்கியுள்ளார்.