அதிமுகவுடன் திடீரென கூட்டணி !பாமக மாநில துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பொங்கலூர் மணிகண்டன் அறிவிப்பு
பாமகவில் இருந்து விலகுவதாக மாநில துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.
அதேபோல் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மக்களவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க- பா.ம.க.-தே.மு.தி.க- த.மா.கா- புதிய தமிழகம் – புதிய நீதிக்கட்சி-என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றது.மேலும் இந்த கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் மக்களவை தேர்தலில் அதிமுக , பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது,பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிருப்தி ஏற்படுத்தியது.இதனால் பாட்டாளி மக்கள் கட்சியின் துணை தலைவர் நடிகர் ரஞ்சித் நான் பாமகவில் இருந்து விலகுகின்றேன் என்று தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில் 8-வழி சாலை என எத்தனை போராட்டங்கள் மக்கள் நடத்தினார்கள், இதை அவர்கள் நினைத்து பார்க்கவில்லை . 4 பேருக்கு என்னால் கூஜா தொக்க முடியாது என்று அவர் தெரிவித்தார் என்று கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
இந்நிலையில் பாமகவில் இருந்து விலகுவதாக மாநில துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அவர் கூறுகையில், அதிமுகவுடன் திடீரென கூட்டணி அமைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.இது பாமகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.