சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சேவை தொடக்கம்! அத்தியாவசிய பணி ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி!
கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தற்போது தான் மெது மெதுவாக இயல்புநிலை திரும்பி வருகிறது. அந்தவகையில், அரசு அவ்வப்போது தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், அலுவலகங்களும் 100 சதவீதம் பணியாளர்களுடன் இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து ரயில்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
இதனையடுத்து கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 30 புறநகர் ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இன்று முதல் கூடுதலாக 12 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்களில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ரயில்வே பணியாளர்கள் மட்டும் பயணிக்கலாம்.
மேலும், அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் என்றும், அடையாள அட்டை இல்லாதவர்கள், பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும், உடல் வெப்பநிலை சோதனை செய்யப்பட்டபிறகு சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து தான் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.