திருச்சியில் விடிய விடிய போராடிய மாணவர்கள்.! பாலியல் குற்றவாளியை கைது செய்த போலீசார்.!
திருச்சி : என்.ஐ.டி விடுதியில் மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் அமைந்திருக்கும் தேசிய தொழில் நுட்பக் கழக (என்ஐடி) விடுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நேற்று இரவு முழுவதும் விடிய விடிய மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்ஐடி மாணவிகள் விடுதி இன்டர்நெட் கனெக்டின் நேற்று பழுது ஏற்பட்டிருக்கிறது. இதனால், அந்த விடுதி நிர்வாகம், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் பணியாளரை அதைச் சரி செய்ய அழைத்துள்ளனர் . அப்போது, பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளி, அறையில் தனியாகப் படித்துக் கொண்டிருந்த மாணவி மீது பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துள்ளார்.
அப்போது அந்த மனைவி எழுப்பிய சப்தத்தைத் தொடர்ந்து உடனடியாக அருகிலிருந்த சக மாணவிகள் திரண்டு வந்துள்ளனர். மேலும், உடனடியாக திருவெறும்பூர் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாணவ/மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சென்ற காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மேலும், இது குறித்து விடுதி வார்டனிடம் அந்த மாணவி, சக மாணவிகளுடன் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால், அப்போது அவருடைய ஆடை குறித்து அந்த வார்டன் விமர்சனம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த மாணவி அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளார். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட அந்த ஊழியரைக் கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியதோடு திருச்சி மத்தியச் சிறையில் அடைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து வார்டனை பணியிடை நீக்கம் செய்யக் கோரியும், இந்த சம்பவத்தைக் கண்டித்தும் கல்லூரி வளாகத்திலேயே உள்ள என்ஐடி இயக்குநர் அகிலா வீட்டை முற்றுகையிட்டுவிடிய விடிய மாணவிகள் போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.
மாணவர்கள் போராட்டத்தை அடுத்து, இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்.பி வருண் குமார் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அப்போது மாணவர்கள் விடுதி காப்பாளரை மாற்ற வேண்டும் எனவும், அவதூறாகப் பேசிய காப்பாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இது போன்ற பல கோரிக்கையை முன்வைத்தனர். தற்போது, அந்த விடுதியின் வார்டன் மன்னிப்பு கேட்டதால் மாணவர்கள் இந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.