மாணவர்கள் கட்டணம் வழங்கவில்லை என்று மாற்று சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவிக்க கூடாது – உயர்நீதிமன்றம்
தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கட்டணம் வழங்கவில்லை என்று மாற்று சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவிக்க கூடாது.
கொரோனா காலங்களில், மாணவர்கள் கட்டணம் அதிகமாக உள்ள காரணத்தால், கட்டணம் குறைவாக உள்ள பள்ளிகளில் சேருகின்றனர். அப்போது மாற்று சான்றிதழ் இல்லாமல் சில பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சில பிரச்சனைகள் எழுந்த நிலையில், மாற்று சான்றிதழ் இல்லாவிட்டாலும், வேறு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிர்த்து, சென்னை உய்ரநீதிமன்றத்தில், ஐக்கிய பள்ளிகள் சங்கம் என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மாற்று சான்றிதழ் இல்லாவிட்டாலும், பள்ளிகளில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது என தெரிவித்தனர்.
இந்த கருத்தினை பதிவு செய்த நீதிபதி, மாற்று சான்றிதழ் மிகவும் அவசியமான ஒன்று தான். அது இல்லாமல் பள்ளியில் சேர்ப்பது சாத்தியமில்லாத ஒன்று தான் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதே நேரம் மாற்று சான்றிதழ் இல்லை என்ற காரணத்திற்காக மட்டும் ஒரு மாணவனின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது.
எனவே மாற்று சான்றிதழ் இல்லை என்றாலும், மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும், கட்டணம் செலுத்தவில்லை என்பதை காரணம் காட்டி மாற்று சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவிக்க கூடாது என்றும் தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். மேலும், நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகளின் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.