மாணவர்களே தயாராகுங்க…”பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும்” – அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
சென்னை:ஜனவரி 3 ஆம் தேதி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும், மேலும்,ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
நெல்லையில் சாஃப்டர் பள்ளிக் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில்,அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி கட்டடம் குறித்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில்,தமிழகத்தில் உள்ள பழுதான பள்ளி கட்டடங்களை இடிப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,பள்ளிகளில் கூடுதலாக தேவைப்படும் வகுப்பறைகள்,அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அதே சமயம்,பள்ளியில் பாலியல் புகார் பெட்டிகள் அமைப்பது குறித்தும் குறிப்பாக,பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு,காலாண்டு தேர்வு ரத்தான நிலையில்,திருப்புதல் தேர்வு எப்போது நடத்தலாம்? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில்,ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ கட்டாயம் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறியதாவது:
பள்ளிகளில் பழைய கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில்,முதற்கட்டமாக பழைய கட்டடங்கள் உள்ள 1,600 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அவைகளை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்,ஜனவரி 3 ஆம் தேதி திருப்புதல் தேர்வு நடைபெறும்.மேலும்,ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ கட்டாயம் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.