மாணவர்கள் விருப்பம் இருந்தால் மட்டும் பள்ளிக்கு வரலாம் – அமைச்சர் செங்கோட்டையன்!
மாணவர்கள் விருப்பம் இருந்தால் மட்டும் பள்ளிக்கு வரலாம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் பூட்டப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பி திறக்கப்படவில்லை. சில பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டாலும், ஒரு சில வகுப்புகளுக்கு மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆன்லைன் மூலமாக மாணவர்கள் பாடம் கற்றுக்கொள்வது முறையாக இல்லை என்பதால் பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் வரும்படியாக தற்பொழுது ஆலோசனை எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக மாணவர்கள் எப்படி பள்ளிக்கு வரவேண்டும், பள்ளிக்கூடம் எப்படி இருக்க வேண்டும் என்ற வரைமுறை அண்மையில் கூறப்பட்டு இருந்தது.
இதனை அடுத்து பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. பள்ளிக்கு வரக் கூடிய மாணவர்கள் பெற்றோர்களின் அனுமதி கடிதத்துடன் வரவேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், மாணவர்கள் கல்வி சிறக்க வேண்டும் என்பதற்காகத்தான் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இருப்பினும் விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.