பெற்றோர்கள் விருப்பப்படி மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
நவ.1 முதல் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நவ.1ஆம் தேதியில் இருந்து ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. காலை முதல் மாலை வரை வழக்கம்போல் முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும். திங்கட்கிழமை ஒரு வகுப்பிற்கு பாடம் நடத்தப்பட்டால் செவ்வாய் அன்று விடுமுறை என தெரிவித்தார்.
எந்த வகுப்பு மாணவர்களை எந்தெந்த நாளில் வரவைக்க வேண்டும் என்பதை பள்ளிகளே முடிவு செய்யலாம். சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் பெற்றோர்கள் விருப்பப்படி மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் எனவும் கூறியுள்ளார்.
பள்ளிகளில் வழக்கம்போல் சத்துணவு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்கும் வகையில் சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும் என்றும் ஆன்லைன் வகுப்பு மூலமாகவும் மாணவர்கள் படிக்கலாம் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்தார்.