பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு… திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.!
சென்னை: அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இளங்கலை படிப்பு வரையில் மாதம் 1000 ரூபாய் வீதம் கல்வியாண்டில் 10 மாதங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவி தொகை அளிக்கும் முதலமைச்சரின் திறனாய்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வு வரும் ஜூலை 21ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 26 வரையில் என கூறப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் ஜூலை 3ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
யாரெல்லாம் பயன்பெறலாம்.?
முதலமைச்சரின் திறனாய்வுத் திட்டத்தின் கீழ் பயன்பெற 2023-24ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பயின்று தற்போதைய கல்வியாண்டில் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து கொண்டு இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது.?
திறனாய்வு தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது https://tnegadge.s3.amazonaws.com/notification/TCMTSE/1718083442.pdf என்ற இணையதள பக்கம் சென்று நேரடியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதன்பிறகு விண்ணப்பத்தை நிரப்பி 50 ரூபாய் கட்டணம் செலுத்தி பின்னர், மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஜூலை 3ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் ஜூலை 3ஆம் தேத்திக்குள் அதனை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை :
ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் திறனாய்வுத் தேர்வில், 9,10 ஆம் வகுப்புக்கான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்திட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்படும். முற்பகல் (காலை 10.00 முதல் 12.00 மணி வரையில்) தேர்வில் 60 மதிப்பெண்களுக்கு கணிதமும், பிற்பகல் (2.00 முதல் 4.00 மணி வரையில்) தேர்வில் 60 மதிப்பெண்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும்.
எத்தனை மாணவர்கள் பயன்பெறுவர்.?
தமிழ்நாடு முழுக்க திறனாய்வு தேர்வில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் 500 மாணவிகளும், 500 மாணவர்களும் சேர்த்து 1000 மாணவர்களுக்கு 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இவை ஏற்கனவே குறிப்பிட்டதுபோல இளங்கலை படிப்பு வரையில் மாதம் 1000 ரூபாய் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.