மாணவர் நலன் காக்கும் செயல் -ராமதாஸ் ட்வீட்
முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில்நுட்ப பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத்தேர்வு நடத்துவது குறித்து ஆராய, உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கு விலக்கு அளித்து, மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதி அளித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகளுக்கான இறுதிப் பருவம் தவிர்த்து, மீதமுள்ள அனைத்துப் பருவத்தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது மாணவர் நலன் காக்கும் செயல்.
இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பபது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். ஆனால், இது மட்டும் போதாது. இறுதிப் பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும்!
இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் வரவில்லை என்றால், இறுதிப் பருவத் தேர்வுகளை தமிழக அரசு தன்னிச்சையாக ரத்து செய்து தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
கொரோனா சோதனை நம்மையும், மற்றவர்களையும் காப்பதற்கான சோதனை. அதை முழு ஈடுபாட்டுடன் செய்து கொள்ள வேண்டும். சோதனையின் போது உண்மையான தகவல்களையே தர வேண்டும். சோதனை முடிவு தெரியும்வரை வெளியில் செல்லாமல் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.#SelfQuarantine
— Dr S RAMADOSS (@drramadoss) July 23, 2020