ஆண்ட்ராய்டு போனுக்காக மாணவி தற்கொலை ,பாகுபாடின்றி ஆன்லைன் வகுப்புகளை நடத்துக – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்தும் வகையில், தரப்படுத்தி, சமவாய்ப்பை ஏற்படுத்திவிட்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்துக என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று நெஞ்சை கனமாக்கும் இரு செய்திகள்.உளுந்தூர்பேட்டை – மேட்டுநன்னாவரம் கிராமத்து விவசாயி ஆறுமுகத்துக்கு மூன்று மகள்கள். வசதி இல்லாததால் மூவருக்கும் சேர்த்து ஒரே செல்போன் வாங்கித் தந்துள்ளார். ஒரே நேரத்தில் மூவருக்கும் வகுப்புகள் எனில் யார் பயன்படுத்துவது? இதனால் ஏற்பட்ட விரக்தியில் மூத்த மகள் நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார் .ஆலங்குடி – கபளம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ்மா, நீட் தேர்வு எழுத வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்கொலை செய்திருக்கிறார்.
நீட் தேர்வை பலிபீடம் என்பதும், அனைவருக்குமானது அல்ல ஆன்லைன் வகுப்புகள்’ என்பதும் இதனால்தான்.
ஆன்லைன் வகுப்புகளை அறிவிக்கும் முன் அனைவருக்கும் ஆண்ட்ராய்டு செல்போன் இருக்கிறதா? ஒரு வீட்டில் மூன்று குழந்தைகள் என்றால் தனித்தனியாக இருக்கிறதா ? தடையற்ற இணையம் இருக்கிறதா ? இணையத்துக்கு மாதம் தோறும் செலவு செய்யும் வசதி இருக்கிறதா – என எது குறித்தும் கவலைப்படாமல் அரசு அறிவித்ததால் ஏற்பட்ட மரணம் தான் நித்தியஸ்ரீயின் மரணம்.
கல்வி என்பது பட்டம் பதவிகளுக்கானது அல்ல; சம வாய்ப்பை வழங்காத எந்தக் கல்வியும் ஏற்றத்தாழ்வையும் விரக்தியையுமே விதைக்கும்.இதைச் சொல்வதால் ஆன்லைன் வகுப்புகளை எதிர்ப்பதாக பொருள் சொல்ல வேண்டாம். பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்திக் கொள்வதாக ஆன்லைன் வகுப்புகளில் சமவாய்ப்பை ஏற்படுத்திவிட்டு நடத்துங்கள் என்றே சொல்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் வகுப்பிற்கு ஆண்ட்ராய்டு போனுக்காக சகோதரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் நித்யஸ்ரீ என்ற மாணவி தற்கொலை! நெஞ்சு கனக்கிறது!
அரசின் பொறுப்பின்மையால் வந்த வினை!
பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்தும் வகையில், தரப்படுத்தி, சமவாய்ப்பை ஏற்படுத்திவிட்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்துக! pic.twitter.com/oFfUYOFvhw
— M.K.Stalin (@mkstalin) September 2, 2020