மாணவி பாலியல் வழக்கு : ஆன்லைன் எப்.ஐ.ஆர் விவரங்களை முடக்கிய காவல்துறை!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்த FIR நகலை யாரும் பார்க்க முடியாதபடி காவல்துறை முடக்கம் செய்துள்ளது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார் என்ற செய்தி தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஞானசேகரன் என்பவரை நேற்று கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர்.
நேற்று கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது. அப்போது பதியப்பட்ட FIR விவரங்கள் இணையத்தில் வெளியானதாக கூறப்படுகிறது. அதில் மாணவி பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, இன்று, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் எனும் முதல் தகவல் அறிக்கை ரிப்போர்ட்டை காவல்துறை முடக்கியுள்ளது. மாணவியின் விவரங்களை வேறு யாரும் பார்க்க முடியா வண்ணம் தொழில்நுட்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேலும் , எப்.ஐ.ஆரில் உள்ள வழக்கு விவரங்களையோ, பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களையோ யாரேனும் பொதுவெளியில் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.