மாணவி பிரதீபா உயிரிழந்த விவகாரம்…! வெளியான அதிர்ச்சி தகவல்.!
விஸ்ரா ஆய்வில் இதயவால்வு பிரச்சினையில் அடைப்பு ஏற்பட்டு பிரதீபா உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தவர் பிரதீபா. இவரது சொந்த ஊர் வேலூர், இதனால், பெரம்பூரில் தங்கியிருந்து படித்து வந்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக இறுதி ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் பிரதீபா பணியாற்றி வந்தார். வீட்டிற்கு போக அனுமதி இல்லாததால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள விடுதியிலேயே தங்கியிருந்தார்.
இதைத்தொடர்ந்து ,கடந்த மே 1-ம் தேதி விடுதியில் மாணவி பிரதீபா மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. தற்கொலையா..? அல்லது கொரோனாவால் உயிரிழந்தார..?என பல கேள்விகள் எழுந்தன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
பிரதீபா உடலை பிரதே பரிசோதனை செய்ததில் விஷம் குடித்து தற்கொலை செய்யவில்லை எனவும், கொரோனா தொற்றும் இல்லை என அறிக்கை வந்தது. இந்நிலையில் அவரது உடல் பாகங்கள் விஸ்ரா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்த சோதனை முடிவுகள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், விஸ்ரா ஆய்வில் இதயவால்வு பிரச்சினையில் அடைப்பு ஏற்பட்டு பிரதீபா உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது என கூறினர்.